தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் போக்குவரத்து காவல்துறையினர், சாலை விதிகளை மீறுவோரை அத்துமீறி பிடித்து விதிக்கப்பட்ட அபராதத்தை விட கூடுதல் அபராதம் விதிப்பது, வண்டியை கைப்பற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அப்படி கர்நாடகாவில் போக்குவரத்து காவல்துறையினர் செய்த செயலால், சிறுமி உயிரிழந்த விவகாரம் பேசு பொருளாக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் மத்தூர் அருகே கோரவனஹள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்-வாணி தம்பதி. இந்த தம்பதிக்கு 4 வயதில் ஹிருதிஷா என்ற பெண் குழந்தை இருந்துள்ளது. நேற்று (26.05.2026) காலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்ததாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் ஹெல்மெட் அணியாமல் அசோக்கும், வாணியும் மகளுடன் அவ்வழியே வேகமாக சென்றுள்ளனர். அவர்களை கவனித்த போக்குவரத்து போலீசார், வாகனத்தை நிறுத்தக் கூற, அவர்கள் மருத்துவமனை செல்லும் அவசரத்தில் நிறுத்தாமல் செல்ல முயன்றுள்ளனர்.
போக்குவரத்து போலீசார் அவர்களை செல்ல விடாமல் இருசக்கர வாகனத்தை இழுத்ததாக கூறப்படுகிறது. இதில் நிலை தடுமாறிய மூவரும் சாலையில் விழுந்தனர். இந்த விபத்தில் சிறுமி ஹிருதிஷா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பெற்றோ சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதனையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு ஒன்று திரண்டு, போலீசாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டியா போலீசார், விபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.
சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விபத்து ஏற்பட காரணமான போக்குவரத்து போலீசார் ஜெயராம், நாகராஜ், குருதேவ் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படனர். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த சிறுமியின் தந்தை அசோக், எனது மகள் உயிர் போனதற்கு போலீசார் தான் காரணம். மகளை இழந்த எனக்கு இழப்பீடு வழங்குவதாக கூறுகிறார்கள். இழப்பீடு எனக்கு வேண்டாம். நான் ரூ.10 லட்சம் கொடுக்கிறேன், எனது மகளை திரும்ப கொடுத்து விடுங்கள்” என கூறி கண்ணீர் விட்டு அழுதார்.
