டெல்லி மற்றும் பெங்களூருவில் மொத்தம் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளிகளுக்கு மர்ம நபர்களிடம் இருந்து தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் வருவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், டெல்லியில் 20 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர்ஸ், பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உட்பட மொத்தம் 20 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளது.
தகவலறிந்த போலீசார் மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். பின்னர் மிரட்டல் என்பது புரளி என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும், வெடிகுண்டு மிரட்டல் அனுப்பிய இ மெயில் முகவரியை கைப்பற்றிய போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதேப் போல பெங்களூருவில் உள்ள 40 தனியார் பள்ளிகளுக்கு இமெயில் வாயிலாக மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். அத்தோடு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.