காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுவதற்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் (78). சமூக வலைதளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டார்.
அதில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்க பிரதமர் மோடி தரையில் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்துடன் திக்விஜய் சிங் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கோரா தளத்தில் இந்த புகைப்படத்தை கண்டுபிடித்தேன். ஆர்எஸ்எஸ் அமைப்பின் கடைநிலை தொண்டர்கள், ஜன் சங்கத்தின் (பாஜக) கட்டமைப்பு பிரமிப்பூட்டுகிறது. ஒரு தொண்டர் (பிரதமர் மோடி) மூத்த தலைவர்களின் காலடியில் அமர்ந்திருக்கிறார். பின்னர் அந்த தொண்டர் மாநிலத்தின் முதல்வராகி, பின்னர் நாட்டுக்கே பிரதமராகிவிட்டார். இதுதான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலம். ஜெய் ராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்பு கடந்த 19-ம் தேதி திக் விஜய் சிங் வெளியிட்ட பதிவில், “சமூக, பொருளாதார விவகாரங்களில் ராகுல் காந்தி முழு மதிப்பெண்களை பெறுகிறார். அதேநேரம் காங்கிரஸையும் அவர் கவனிக்க வேண்டும். கட்சியின் கட்டமைப்புகளில் ராகுல் கவனம் செலுத்த வேண்டும். இது உங்களால் முடியும். ஆனால் உங்களிடம் (ராகுல் காந்தி) இருக்கும் மிக முக்கிய பிரச்சினை, எந்த விஷயத்திலும் உங்களை அவ்வளவு எளிதில் சம்மதிக்க வைக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.
திக்விஜய் சிங்கின் சமூக வலைதள பதிவுக்கு காங்கிரஸ் தலைமை கடும் கண்டனம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ஓர் அமைப்பின் கட்டமைப்பு குறித்து மட்டுமே நான் பாராட்டு தெரிவித்தேன். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டனர். நான் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பை கடுமையாக எதிர்க்கிறேன்’’ என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவன் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “திக்விஜய் சிங் பதிவின் மூலம் காங்கிரஸ் தலைமையின் சர்வாதிகார, ஜனநாயகத்துக்கு விரோதமான செயல்பாடுகள் அம்பலமாகி உள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவிக்க ராகுல் காந்திக்கு துணிவு இருக்கிறதா? ஒரு குடும்பம் காங்கிரஸை ஆட்டிப் படைத்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
