“இந்த ஆண்டு, ‘ஆபரேஷன் சிந்துர்’ ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையின் சின்னமாக மாறியது. இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதை உலகம் தெளிவாகக் கண்டது என்று பிரதமர் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசினார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக மோடி பதவியேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், மன் கி பாத் எனும் நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். வானொலி வாயிலாக ஒலிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய தகவல்களை நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொள்வார்.
அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 28) ஒலிபரப்பாகிறது. பிரதமர் மோடியின் 129 வது மன் கி பாத் நிகழ்ச்சி இதுவாகும். மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “இந்த ஆண்டு, ‘ஆபரேஷன் சிந்துர்’ ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையின் சின்னமாக மாறியது. இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்வதில்லை என்பதை உலகம் தெளிவாகக் கண்டது. ‘ஆபரேஷன் சிந்துர்’ நடவடிக்கையின் போது, அன்னை பாரதத்தின் மீதான அன்பும் பக்தியும் நிறைந்த காட்சிகள் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிப்பட்டன. ‘வந்தே மாதரம்’ 150 ஆண்டுகளை நிறைவு செய்தபோதும் இதே உணர்வுதான் காணப்பட்டது,” என்று கூறினார்.
2025 ஆம் ஆண்டு ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்படும் பல தருணங்களை நமக்கு வழங்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார். தேசிய பாதுகாப்பு முதல் விளையாட்டுத் திடல்கள் வரை, அறிவியல் ஆய்வகங்கள் முதல் உலகின் மிகப்பெரிய மேடைகள் வரை, இந்தியா எல்லா இடங்களிலும் ஒரு வலுவான முத்திரையைப் பதித்துள்ளது. அறிவியல் மற்றும் விண்வெளித் துறைகளிலும் இந்தியா பெரும் பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான பல முன்முயற்சிகளும் 2025 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்தியாவில் இப்போது சிறுத்தைகளின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டியுள்ளது.
உலகையே வியப்பில் ஆழ்த்திய மகா கும்பமேளா: “2025-ல் நம்பிக்கை, கலாச்சாரம் மற்றும் இந்தியாவின் தனித்துவமான பாரம்பரியம் அனைத்தும் ஒன்றிணைந்தன. ஆண்டின் தொடக்கத்தில் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா ஏற்பாடு செய்யப்பட்டது உலகையே வியப்பில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதியில், அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கொடியேற்றும் விழா ஒவ்வொரு இந்தியரையும் பெருமை கொள்ளச் செய்தது,” என்றார். உள்நாட்டுப் பொருட்களுக்கு மக்கள் பெரும் உற்சாகம் காட்டியுள்ளதாகவும், இந்தியர்களின் கடின உழைப்பால் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே மக்கள் வாங்குவதாகவும் அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு மேலும் அதிக நம்பிக்கையை அளித்துள்ளது என்று இன்று நாம் பெருமையுடன் கூறலாம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 இந்த மாதம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இந்த ஹேக்கத்தானில், மாணவர்கள் 80-க்கும் மேற்பட்ட அரசு துறைகள் வழங்கிய 270-க்கும் அதிகமான பிரச்சினைகளில் பணியாற்றினர்.
“முயற்சி இருந்தால் வழி உண்டு” என்ற பழமொழியை மணிப்பூரைச் சேர்ந்த இளைஞர் மொய்ராங்தெம் சேத் ஜி உண்மையாக்கியுள்ளார். அவர் 40 வயதுக்கும் குறைவானவர். மொய்ராங்தெம் வாழ்ந்த மணிப்பூரின் தொலைதூர பகுதியில் மின்சார வசதி ஒரு பெரிய பிரச்சினையாக இருந்தது. இந்த சவாலைக் கடக்க, அவர் உள்ளூர் தீர்வுக்கு முக்கியத்துவம் அளித்து, சூரிய ஆற்றல் (Solar Power) என்ற தீர்வை கண்டறிந்தார்.
ஒடிசாவின் பார்வதி கிரியின் நூற்றாண்டு பிறந்தநாள் ஜனவரி 2026 இல் கொண்டாடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார். அவர் தனது 16 வயதில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார். சுதந்திர இயக்கத்திற்குப் பிறகு, பார்வதி கிரி தனது வாழ்க்கையை சமூக சேவை மற்றும் பழங்குடி நலனுக்காக அர்ப்பணித்தார். அவர் பல அனாதை இல்லங்களை நிறுவினார். அவரது ஊக்கமளிக்கும் வாழ்க்கை ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடர்ந்து வழிகாட்டும்.
