தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 8 மணி முதலே முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கும் நிலையில், பொதுமக்கள் குழப்பமின்றி துல்லியமான தகவல்களைப் பெறுவதற்காகத் தேர்தல் ஆணையம் பிரத்யேக இணையதள வசதிகளைச் செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ஒவ்வொரு தொகுதியின் நிலவரமும் உடனுக்குடன் நேரலையாகப் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப யுகத்திற்கு ஏற்ப, மக்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தபடியே மொபைல் போன் வழியாக முடிவுகளைத் தெரிந்துகொள்ள ‘Voter Helpline’ மற்றும் ‘ECINET’ ஆகிய செயலிகள் தயார் நிலையில் உள்ளன. இந்தச் செயலிகள் மூலம் எந்த வேட்பாளர் முன்னிலையில் உள்ளார், வாக்கு வித்தியாசம் எவ்வளவு போன்ற விவரங்களை வரைபட விளக்கங்களுடன் (Graphics) எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள வாக்குகளும் எண்ணப்பட்டு, ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும். வெளிப்படையான மற்றும் வேகமான தகவல்தொடர்பை உறுதி செய்யத் தேர்தல் ஆணையம் இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.
