ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக எரிசக்தி விநியோகத்தின் இதயமாக கருதப்படும் ஹார்மூஸ் நீரிணை (Strait of Hormuz) தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக கப்பல் போக்குவரத்து இயல்பான அளவிற்கு திரும்பாததால், உலக நாடுகள் மாற்று வழிகளை அவசரமாக தேட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
சாதாரணமாக, தினமும் சுமார் 20 மில்லியன் பேரல் எண்ணெய் மற்றும் உலகளாவிய இயற்கை எரி வாயு ஏற்றுமதியின் ஐந்தில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாக செல்கிறது. இதன் மூலம் ஹீலியம், உர உற்பத்திக்கான யூரியா போன்ற முக்கிய பொருட்களும் கொண்டு செல்லப்படுகின்றன. இத்தகைய முக்கியமான வழித்தடம் பாதிக்கப்படும்போது, உலகளாவிய பொருளாதாரம் அதிர்வை சந்திப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
ஹார்மூஸ் நீரிணைக்கு முழுமையான மாற்று இல்லை
இந்த நிலையை எதிர்கொள்ள, பல ஆண்டுகளாக திட்டமிடப்பட்ட மாற்று வழிகள் தற்போது சோதனைக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் அவற்றின் செயல்திறன், ஹார்மூஸ் நீரிணைக்கு முழுமையான மாற்றாக இருக்க முடியாதது தெளிவாகியுள்ளது. தற்போது உள்ள பைப்லைன் மற்றும் மாற்று கட்டமைப்புகள் சேர்த்து தினமும் 3.5 முதல் 5.5 மில்லியன் பேரல் எண்ணெயை மட்டுமே கையாள முடிகிறது. இது ஹார்மூஸ் வழியாக செல்லும் அளவுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
சவுதி அரேபியாவின் East-West Pipeline (Petroline) இந்த மாற்று வழிகளில் முக்கியமானதாகும். 1980-களில் உருவாக்கப்பட்ட இந்த குழாய், தற்போது அதிகபட்சமாக 7 மில்லியன் பேரல் வரை எடுத்துச் செல்லும் திறன் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஆனால் செங்கடல் கரையில் உள்ள Yanbu துறைமுகத்தின் கட்டமைப்பு இதனை முழுமையாக கையாளும் அளவிற்கு தயார் நிலையில் இல்லை. இதனால், அதன் முழுத் திறன் நடைமுறையில் பயன்படுத்தப்படவில்லை.
மேலும், யன்பு (Yanbu) வில் இருந்து ஐரோப்பாவிற்கு செல்லும் எண்ணெய், எகிப்தின் Sumed பைப்லைன் வழியாக கடக்க வேண்டும். அதன் திறன் தினமும் 2.5 மில்லியன் பேரல் மட்டுமே என்பதால், இது கூட ஒரு bottleneck ஆக செயல்படுகிறது. இதனால், மாற்று வழிகள் இருந்தாலும், அவை முழுமையான தீர்வாக அமையவில்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் Abu Dhabi Crude Oil Pipeline (ADCOP),ஹார்மூஸ் நீரிணையை தவிர்த்து இந்தியப் பெருங்கடலில் சேரும் ஒரே முக்கிய வழியாக உள்ளது. ஹப்ஷான் முதல் ஃபுஜைரா வரை ( Habshan- Fujairah) செல்லும் இந்த குழாய், தினமும் சுமார் 2 மில்லியன் பேரல் எண்ணெயை கையாளும் திறன் கொண்டது. ஆனால் இந்த வழியும் பாதுகாப்பானதல்ல. சமீபத்திய ட்ரோன் தாக்குதல்கள் ஃபுஜைராவில் சேமிப்பு வசதிகளை சேதப்படுத்தி, ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
சிக்கலில் வளைகுடா நாடுகள்
இதேநேரத்தில், ஈராக் மற்றும் குவைத் போன்ற நாடுகள் மிகுந்த சிக்கலில் உள்ளன. இந்நாடுகள் தங்களது எண்ணெய் ஏற்றுமதிக்காக பெரும்பாலும் ஹார்மூஸ் நீரிணையை மட்டுமே நம்பியிருந்தன. ஈராக் வடக்கு வழியாக துருக்கி வழியாக செல்லும் பைப்லைன் வைத்திருந்தாலும், அதன் திறன் மிகக் குறைவு. குவைத்துக்கு மாற்று பைப்லைன் வசதி இல்லாததால், அதன் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கத்தாரின் நிலை வேறுபட்டதாக இருந்தாலும் அதே அளவுக்கு கவலைக்குரியது. உலகின் மிகப்பெரிய இயற்கை எரி வாயு ஏற்றுமதி மையமாக விளங்கும் கத்தார், தனது எரிவாயுவை முழுமையாக ஹார்மூஸ் வழியாகவே அனுப்புகிறது. இதற்கு மாற்று வழி இல்லாததால், உலக எரிவாயு சந்தையில் அச்சம் நிலவுகிறது.ஈரானும் ஹார்மூஸ் நீரிணையைத் தவிர்க்க ஒரு பைப்லைன் அமைத்திருந்தாலும், அது முழுமையாக செயல்படவில்லை. கட்டமைப்பு குறைபாடுகள் மற்றும் தடைகள் காரணமாக அதன் பயன்பாடு மிகக் குறைவாகவே உள்ளது.
புதிய பைப்லைன்கள் தீர்வாகுமா?
இந்த சூழலில், புதிய பைப்லைன்களை அமைப்பதே தீர்வாக இருக்குமா என்கிற கேள்வி எழுகிறது. ஆனால் அதற்கான செலவு மிகப்பெரியது. ஹார்மூஸ் நீரிணையை மாற்றும் அளவிற்கு புதிய கட்டமைப்புகளை உருவாக்க நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர் முதலீடு மற்றும் பல ஆண்டுகள் தேவைப்படும். அதுமட்டுமல்லாமல், இந்த புதிய வழிகளும் பாதுகாப்பு அச்சுறுத்தலிலிருந்து விடுபடாது.
இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?
இதனால், ஹார்மூஸ் நீரிணைக்கு மாற்று வழிகளை தேடும் முயற்சிகள் தொடர்ந்தாலும், அவை உடனடி மற்றும் முழுமையான தீர்வாக அமைய முடியாது என்பது தெளிவாகிறது. உலக நாடுகள் இப்போது எதிர்கொள்ளும் உண்மையான நெருக்கடி என்னவென்றால், ஹார்மூஸ் நீரிணை இன்னும் உலக எரிசக்தி விநியோகத்தின் மையமாகவே திகழ்கிறது என்பதுதான். இந்த நெருக்கடி, உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு குறித்து புதிய சிந்தனையை உருவாக்கியுள்ளது. ஒரே வழித்தடத்தை சார்ந்திருப்பதன் அபாயத்தை உணர்த்தியுள்ள இந்த நிலை, எதிர்காலத்தில் பல்வேறு மாற்று வழிகளை உருவாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.
