கேரளாவில் கடந்தாண்டு ஜூலை 30-ம் தேதி பெய்த கனமழையால், முண்டகை, சூரல்மலை உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள், கட்டடங்கள் மண்ணில் புதைந்தது. அத்தோடு 400-க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் மாயமாகினர். ஒட்டுமொத்த இந்தியாவையும் நிலைகுலைய வைத்த இந்த துயர சம்பவத்தில் இருந்து கடந்த ஒரு வருடமாக மக்கள் மீண்டு வந்து கொண்டு உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் மழை கோரத்தாண்டவம் ஆடுவதால், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு கேரளாவில் பருவமழை விரைவாகத் தொடங்கியது. அதன்படி புன்னம்புழா ஆற்றில் நீர்மட்டம் மழையால் உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஆற்றின் குறுக்கே இருந்த பெய்லி பாலம், கடந்தாண்டு நிலச்சரிவின் போது கட்டப்பட்டது. பாலத்தின் மறுபுறம் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால், வயநாடு, முண்டகை பகுதியில் புதிய நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை அதிகாரிகள் மழை பெய்யும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இருப்பினும் நிலச்சரிவு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version