‘டிட்வா’ புயலால் கடும் சேதத்தை சந்தித்துள்ள இலங்கைக்கு இந்தியா துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இலங்கை அருகே உருவான ‘டிட்வா’ புயல் அந்நாட்டில் கடுமையாக சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு போன்ற பேரிடர்களால் இலங்கையின் சூழல் தலைகீழாக மாறி உள்ளது. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. மாயமானவர்களின் எண்ணிக்கையும் 370ஐ கடந்துள்ளது. பல மாகாணங்கள் வெள்ளத்தால் சூழ்ந்து, மிதக்கின்றன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளநிலையில், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே புயல் பாதித்த இலங்கைக்கு உடனடியாக நிவாரண உதவிகளை இந்தியா அனுப்பியது. 21 டன் நிவாரணப் பொருட்களையும், 80 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்களையும் அனுப்பி வைத்து, மீட்பு பணிகளில் இந்தியாவும் பங்கேற்றுள்ளது.
இந்தநிலையில், இயற்கை பேரிடர் பாதிப்பு குறித்து இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகேவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்தார். அப்போது, வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது இரங்கலை தெரிவித்துக் கொண்ட பிரதமர் மோடி, ‘ஆப்பரேஷன் சாகர் பந்து’ மூலம் இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்தியா செய்து தர தயாராக இருப்பதாக உறுதியளித்தார். நிவாரணப் பொருட்கள் மற்றும் மீட்பு படையினரை அனுப்பி உதவிய பிரதமர் மோடிக்கு, இலங்கை மக்களின் சார்பில் நன்றியை தெரிவிப்பதாக இலங்கை அதிபர் அநுர குமார திசநாயகே குறிப்பிட்டார்.
