அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இன்று (ஏப்ரல் 10) தனது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். கடந்த ஆண்டு டெல்லியில் அவர் தங்கியிருந்த அரசு குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, அவரது ரகசிய அறையில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான ஊழல் புகாரில் அவர் மீது நாடாளுமன்ற விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அவர் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான பதவி நீக்கத் தீர்மானத்தை வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் 140-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் விசாரணை இறுக்கமடைந்த நிலையில், பதவி நீக்கத்தைத் தவிர்க்கும் நோக்கில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியுள்ள அவர், மிகுந்த மனவேதனையுடன் இந்தப் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.  அவர் தானாக முன்வந்து ராஜினாமா செய்துள்ளதால், ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கான சலுகைகள் மற்றும் ஓய்வூதியத்தைப் பெறுவதில் சட்டச் சிக்கல்கள் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version