தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 7.35 டி.எம்.சி தண்ணீரை திறக்க வேண்டுமென கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் 46வது காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று (டிச. 8) நடைபெற்றது. எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைப்பெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு உறுப்பினர் மற்றும் நீர்வளத்துறை அரசு செயலாளர் ஜெ.ஜெயகாந்தன் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழுமம் மற்றும் பன்மாநில நதி நீர்ப் பிரிவு தலைவர் ரா.சுப்ரமணியன் ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் கலந்துகொண்டனர்.
இன்றைய (டிச. 8) நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர் இருப்பு 87.554 டி.எம்.சி ஆக உள்ளது என்றும் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4,282 கன அடியாக உள்ளது என்றும் அணையில் இருந்து வினாடிக்கு 2,986 கன அடி நீர் விவசாயம், குடிநீர் மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக திறந்துவிடப்படுவதாகவும் கூட்டத்தில் தமிழ்நாடு உறுப்பினர் தெரிவித்தார். மேலும், தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தநிலையில், கர்நாடக அணைகளின் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்து கணிசமாக உயர்ந்து வருவதால், காவிரியில் தமிழ்நாட்டிற்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய நீர் அளவான 7.35 டி.எம்.சி நீரை தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு ஆணையிட்டது.
இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது கூட்டத்தில் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளது.
