ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதிச்சடங்கு ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளில், உலகமே வியக்கும் வண்ணம் சுமார் 4.3 கோடி மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தியதாக ஈரான் அரசு ஊடகங்கள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கில் ஏற்பட்ட கடுமையான போர்ப் பதற்றத்திற்குப் பிறகு, 6 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதிச்சடங்கு நிகழ்வு நேற்றுடன் (ஜூலை 9) நிறைவு பெற்று, அயதுல்லா அலி கமேனியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அணுசக்தி விவகாரம் தொடர்பாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ம் தேதி கூட்டுத் தாக்குதலை தொடங்கின. இந்தத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மிகக் கடுமையான போர் மூண்டது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுத்தது. இந்த போரால் உலக நாடுகள் கடுமையான எரிபொருள் பிரச்சனையை சந்தித்தன.
இந்த மோதலால், கமேனியின் இறுதிச்சடங்குகளை உடனடியாக நடத்த முடியாத சூழல் நிலவியது. பின்னர் சர்வதேச நாடுகளின் தலையீடு மற்றும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே தற்காலிக அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, தள்ளிவைக்கப்பட்டிருந்த இறுதிச்சடங்கு நிகழ்வுகள் ஜூலை 4-ம் தேதி முறைப்படி தொடங்கின. அலி கமேனியின் உடல் ஈரானின் முக்கிய நகரங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஈரானின் அண்டை நாடான ஈராக்கிற்கும் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள ஷியா பிரிவு இஸ்லாமிய மக்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
கடந்த 6 நாட்களாகப் பல கோடி மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் வலம் வந்த அலி கமேனியின் உடல், நேற்று (ஜூலை 9) ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள புகழ்பெற்ற ‘கிராண்ட் முசாலா’ மத வழிபாட்டுத் தலத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடைபெற்ற இறுதி பிரார்த்தனைகளுக்குப் பிறகு, லட்சக்கணக்கான மக்களின் முன்னிலையில் அவரது உடல் முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஒட்டுமொத்தமாக இந்த 6 நாள் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் ஈரானிலும், அண்டை நாடுகளிலும் சேர்த்து சுமார் 4.3 கோடி மக்கள் திரண்டு வந்து கமேனிக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. இது உலக வரலாற்றிலேயே ஒரு தலைவரின் இறுதிச்சடங்கில் மிக அதிகமான மக்கள் பங்கேற்ற நிகழ்வுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
