இலங்கையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள ‘டிட்வா’ புயலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது.

இலங்கை மற்றும் அதனையொட்டி தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள ‘டிட்வா’ புயலால் இலங்கையின் பல்வேறு மாகாணங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ளம், நிலச்சரிவு காரணமாக லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த இடங்களில் இருந்து ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், படகுகள் மூலமாகவும் மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வருகின்றனர்.  கம்பளை- நுவரெலியா இடையேயான சாலை மண் சரிவால் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ‘டிட்வா’ புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 150-ஐ கடந்துள்ளது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதால்  உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தநிலையில், ‘டிட்வா’ புயலால் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளநிலையில், இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ‘டிட்வா’ புயல் வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி நகர்வதாகவும், புயலின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில், விமானம் மற்றும் கப்பல் மூலம் உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பி உள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் உதய்கிரி கப்பல்கள் மூலமும், ஏசி 130ஜே விமானம் மூலமும் நிவாரணப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு உதவ கொழும்புவில் உள்ள பண்டாரநாயக்கே சர்வதேச விமான நிலையத்தில் இந்திய தூதரகம் அவசர உதவி மையத்தை அமைத்துள்ளது. தேவையான உணவு மற்றும் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட உதவிகளையும் இந்திய தூதரகம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மோசமான வானிலை காரணமாக துபாயில் இருந்து இலங்கை வழியாக இந்தியா புறப்பட்ட விமானம், முன்னெச்சரிக்கையாக கொழும்புவில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனால், விமானத்தில் பயணித்த 300க்கும் மேற்பட்டவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version