இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து, ட்ரூத் சோஷியல் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலும் ஈரானும் போர்நிறுத்தத்துக்கு முழுமையாக ஒப்புக்கொண்டதாக கூறியுள்ள ட்ரம்ப், இரு நாடுகளின் ராணுவ நடவடிக்கைகளும் முடிந்தவுடன், சுமார் ஆறு மணிநேரத்தில் ஈரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 12 மணிநேரத்தில் இஸ்ரேலும் போர்நிறுத்தத்தைத் தொடங்கும் என்றும் அடுத்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான 12 நாள் போரின் முடிவு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் அமெரிக்க அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் மற்றொரு பதிவில், போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்துவிட்டது என்றும், தயவு செய்து யாரும் அதை மீற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று இரவு கத்தார், சிரியாவில் உள்ள அமெரிக்க விமானப் படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.