இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அழைப்புகள், உடற்பயிற்சி கூடம், பயணம் மற்றும் தூங்கும் போது கூட பாடல்கள் கேட்பது எனப் பலரும் மணி கணக்கில் ப்ளூடூத் இயர்பட்ஸ் மற்றும் வயர்லெஸ் ஹெட்போன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், இதன் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்தே, “ப்ளூடூத் இயர்பட்ஸ்களை நீண்ட நேரம் பயன்படுத்துவது மூளைப் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்குமா?” என்ற அச்சமும் விவாதமும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ப்ளூடூத் தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

ப்ளூடூத் தொழில்நுட்பம் என்பது ரேடியோ அலைவரிசை (Radio Frequency – RF) கதிர்வீச்சு மூலம் செயல்படுகிறது. ‘கதிர்வீச்சு’ (Radiation) என்ற வார்த்தையைக் கேட்டவுடனேயே மக்களுக்குப் புற்றுநோய் போன்ற நோய்களின் பயம் வந்துவிடுகிறது. ஆனால், நிபுணர்களின் கூற்றுப்படி, ப்ளூடூத் சாதனங்கள் வெளியிடும் கதிர்வீச்சு ‘அயனியாக்கமற்ற கதிர்வீச்சு’ (Non-ionizing radiation) வகையைச் சேர்ந்தது. இது எக்ஸ்ரே (X-rays) போன்ற ஆபத்தான அயனியாக்கும் கதிர்வீச்சுகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது மற்றும் மிகவும் பலவீனமானது.

மணி கணக்கில் பயன்படுத்தினால் பாதிப்பு வருமா?

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பயோ-இன்ஜினியரிங் பேராசிரியர் எமரிட்டஸ் டாக்டர் கென் பாஸ்டர் (Dr. Ken Foster) கூற்றுப்படி, ப்ளூடூத் சாதனங்கள் வெளியிடும் கதிர்வீச்சு சாதாரண மொபைல் போன்கள் வெளியிடும் கதிர்வீச்சை விட மிக மிகக் குறைவு. ஒரு நபர் வயர்லெஸ் இயர்பட்ஸ்களை மணி கணக்கில் பயன்படுத்தினாலும், போனில் நேரடியாகப் பேசுவதை விட மிகக் குறைவான கதிர்வீச்சு வெளிப்பாடே அவர்களுக்கு ஏற்படுகிறது என்று அவர் விளக்கியுள்ளார்.

ப்ளூடூத் டிஎன்ஏ-வை (DNA) பாதிக்குமா?

ஆபத்தான கதிர்வீச்சுகள் மட்டுமே உடலின் டிஎன்ஏ-வை சேதப்படுத்தி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கும். ஆனால், ப்ளூடூத் சாதனங்களில் உள்ள அயனியாக்கமற்ற கதிர்வீச்சுக்கு செல்களைச் சேதப்படுத்தும் அளவிற்கு ஆற்றல் கிடையாது. இதனால், ப்ளூடூத் இயர்பட்ஸ்களுக்கும் மூளைப் புற்றுநோய்க்கும் இடையே நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆராய்ச்சியும் இதுவரை நிரூபிக்கவில்லை. வயர்லெஸ் சாதனங்கள் குறித்து இன்னும் கூடுதல் ஆராய்ச்சிகள் தேவைப்பட்டாலும், தற்போதைய நிலவரப்படி ப்ளூடூத் இயர்பட்ஸ் மூளைக் கட்டியையோ அல்லது புற்றுநோயையோ ஏற்படுத்துகிறது என்பதற்கான எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லை.

முன்னெச்சரிக்கைகள்:

கூடுதல் பாதுகாப்பு தேவை என்று நினைப்பவர்கள், தேவை இல்லாத போது இயர்பட்ஸ்களை கழற்றி வைக்கலாம் அல்லது ஒயர்டு ஹெட்போன்களைப் பயன்படுத்தலாம் என்று டாக்டர் கென் பாஸ்டர் கூறுகிறார்.

புற்றுநோயை விட மக்கள் தற்போதைக்கு உடனடியாகப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு விஷயத்தில் தான் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதுதான் அதிக சத்தம்.

நீண்ட நேரம் அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்பது கேட்கும் திறனை நேரடியாகப் பாதிக்கும். எனவே, இயர்பட்ஸ் பயன்படுத்துபவர்கள் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்:

இயர்பட்ஸ் பயன்படுத்தும் நேரத்தை 60 முதல் 90 நிமிடங்களாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். இடையில் அடிக்கடி சிறிய இடைவெளிகள் எடுக்க வேண்டும். ஒலியின் அளவை எப்போதும் 60 முதல் 80 சதவீதத்திற்கு மேல் வைக்கக் கூடாது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version