‘சுவரொட்டி’ என்ற வார்த்தையை கேட்டால், பலருக்கும் சுவரில் ஒட்டப்படும் விளம்பரத் தாள் தான் நினைவுக்கு வரும். ஆனால், இது ஆட்டு மண்ணீரலை குறிக்கும் என்பது பலருக்கும் தெரியாது. பச்சையாக இருக்கும்போது சுவரில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்டிருப்பதாலேயே இதற்கு இந்த பெயர் வந்திருக்கலாம். இது மனித உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் உணவாக இருக்கிறது.
குறிப்பாக, ரத்த சோகை (Anemia) என்னும் இரும்புச்சத்து குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கும், தங்கள் உடலில் ரத்தம் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் அதிகரிக்கும் கர்ப்பிணிகளுக்கும் சுவரொட்டி ஒரு வரப்பிரசாதமாகும். நமது ஊர்களில் சுவரொட்டிக்கு மவுசு அதிகம்.
மட்டன் கடைகளில் ஃப்ரீ ஆர்டர் செய்தால் தான் இதனை சாப்பிட முடியும் என்ற அளவிற்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது. “உடலில் ரத்தத்தை கடகடவென உயர்த்தும் தன்மை கொண்டது” என்று மருத்துவர்களே பரிந்துரைக்கும் அளவிற்கு மக்கத்துவம் கொண்டது என்பது தான் இதன் மவுசுக்கு காரணம்.
சுவரொட்டி, ஆட்டின் ஒரு சிறிய பகுதியாக இருந்தாலும், அது வழங்கும் ஊட்டச்சத்துக்கள் மிக அதிகம். இது ஒரு இரும்புச்சத்தின் பொக்கிஷம் என்றே சொல்லலாம். 100 கிராம் சுவரொட்டி, ஒரு மனிதனின் பல நாட்களுக்கான இரும்புச்சத்து தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது என்கிறார் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவரான டாக்டர் ஸ்ரீவித்யா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுவரொட்டியின் நன்மைகள் பற்றி பதிவிட்டுள்ளார். அதில் உள்ள விவரம் பின்வருமாறு.
சுவரொட்டி நன்மைகள்:
- சுவரொட்டி ஹீம்(HEME)இரும்பின் வளமான இயற்கை ஆதாரங்களில் ஒன்றாகும். இரும்புச்சத்து குறைபாடுள்ள, ரத்த சோகையைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் உதவுகிறது மற்றும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
- இதில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் ஃபோலேட் சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியை ஆதரிக்கிறது மற்றும் ஆற்றல் அளவை மேம்படுத்துகிறது. மேலும், நரம்பு ஆரோக்கியம் மற்றும் டிஎன்ஏ தொகுப்புக்கு முக்கியமானது.
- முழுமையான புரதங்களை வழங்குகிறது. இதன் விளைவாக தசை பழுது, வலிமை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.
- பாரம்பரியமாக பலவீனம், சோர்வு மற்றும் நோயிலிருந்து மீண்டு வருபவர்களுக்கு உயிர்ச்சக்தியை மீட்டெடுக்க சுவரொட்டி வழங்கப்படுகிறது.
- மண்ணீரல் சாறுகள் (பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றன) வெள்ளை ரத்த அணு உற்பத்திக்கு உதவுவதன் மூலம் நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிப்பதாக நம்பப்படுகிறது.
- சில பாரம்பரிய நடைமுறைகளில், ஆண் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்தியை மேம்படுத்த சுவரொட்டி பரிந்துரைக்கப்படுகிறது. சிறுநீரகத் தொற்று மற்றும் கல்லீரல் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவுகிறது.
- சுவரொட்டியை மிளகு, பூண்டு, சீரகம் போன்ற மசாலாப் பொருட்களுடன் சேர்த்து செய்து சாப்பிட்டால் செரிமானம் சீராகும். மேலும், இது வாய்ப்புண், வயிற்றுப்புண் போன்றவற்றை ஆற்றும் திறன் கொண்டது.
- இதில் உள்ள சத்துக்கள் முடக்குவாதம் (Rheumatism) போன்ற எலும்பு மற்றும் மூட்டு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பதாகக் கூறப்படுகிறது.
எப்படி? எவ்வளவு சாப்பிடலாம்?
சுவரொட்டியை சமைக்கும் முறை மற்றும் அளவு அதன் முழுமையான பலனைப் பெற மிகவும் முக்கியம்.
- சுவரொட்டியின் வெளிப்புறத்தில் காணப்படும் மெல்லிய தோலை நீக்கிவிட்டு சமைப்பது நல்லது. இதை நெருப்பில் வாட்டி (சுட்டு) சாப்பிடுவது பாரம்பரிய முறை. சுவரொட்டியின் இரண்டு புறத்திலும் கீறல் போட்டு அதில் உப்பு மற்றும் மிளகுப் பொடி சேர்த்து தீயில் சுட்டு சாப்பிடலாம்.
- இல்லையென்றால் குக்கரில் நான்கு விசில் வைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி குழம்பு, சூப், பொரியல் செய்து சாப்பிடலாம்.
- ரத்த சோகை போன்ற தீவிரப் பிரச்சனை உள்ளவர்கள் அல்லது கர்ப்பிணிகள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சுவரொட்டி உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 50 கிராம் முதல் 100 கிராம் வரை உணவில் சேர்ப்பது போதுமானதாகும்.
- சுவரொட்டி ஆரோக்கியமானது என்றாலும், சிலருக்கு இது ஒவ்வாமையை (Allergy) ஏற்படுத்தலாம் அல்லது வேறு சில உடல்நலக் காரணங்கள் இருக்கலாம். எனவே, கர்ப்பிணிகள் மற்றும் நாட்பட்ட நோய் உள்ளவர்கள் இதைத் தங்கள் உணவில் சேர்ப்பதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
- சுவரொட்டியில் உள்ள இரும்புச்சத்து உடலில் வேகமாக உறிய, சுவரொட்டி உட்கொண்டதும் வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை பழ ஜூஸ் அல்லது நெல்லிக்காய், ஆரஞ்சு, கொய்யாப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.
