அதிமுக கரூர் மாவட்ட புதிய செயலாளர் அலுவலக பூட்டுக்களை உடைத்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

 கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். அதனை தொடர்ந்து சென்னை சென்ற அவர், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். சட்டசபையிலும் எடப்பாடி பழனிசாமி உத்தரவுக்கு எதிராக தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தார். இதனால், இவரை அதிமுக மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அவருக்கு பதிலாக கரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக இருந்த கமலக் கண்ணன் மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த  கமலக்கண்ணன், தனது ஆதரவாளர்களுடன் பழனியப்பா தெருவில் உள்ள அதிமுக மாவட்ட அலுவலகத்திற்கு வருகை தந்தார்.

அங்கு கட்சி அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மற்றும் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டிருந்ததை பார்த்த அவர்கள், பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அலுவலக அறைக்கு சென்ற அவர்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்து விட்டு மீண்டும் வெளியில் வந்த அவர்கள் அலுவலக படிக்கட்டில் அமர்ந்திருந்தனர்.

அப்போது, புதிய மாவட்ட செயலாளருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பூட்டை உடைத்த தகவல் அறிந்து அங்கு வந்த எம்.ஆர்.விஜயபஸ்கர் அணியினர் திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து இரு தரப்பினரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமலகண்ணன், இந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் சென்னை சென்றவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை, புதிதாக என்னை மாவட்ட செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி என்னை அறிவித்துள்ளார். அதனை தொடர்ந்து கட்சி அலுவலகம் வந்தால் அதனை பூட்டி வைத்திருக்கிறார்கள். இது தவறான செயலாகும், கடந்த காலங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்பது அவருக்கே தெரியும் என்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version