அரசுப் பள்ளிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்டுவதாகக் கூறிச் சென்று தவெகவினர் ரீல்ஸ் எடுப்பது பரபரப்பாகி வரும் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா புதிய உத்தரவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் 196-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அஸ்வினி கேள்விக்கு மேயர் பிரியா பதில் அளித்து பேசியதாவது;-
சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள பள்ளிகளில் மக்கள் பிரதிநிதிகள், அதாவது கவுன்சிலர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர்த்து வேறு யாரும் உள்ளே செல்ல கூடாது.
பெற்றோர்கள் ஆசிரியர்கள் மாணவா்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும்.
பள்ளி மற்றும் வகுப்பறைகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்றால் தலைமை ஆசிரியரிடம் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
அதை தவிர்த்து கட்சி நபர்கள் நேரடியாக வகுப்பறைக்கு சென்று முதலமைச்சர் புகைப்படத்தை மாட்டக்கூடாது
பள்ளி வளாகம் என்பது கல்வி கற்கும் இடம். எனவே அங்கு தவறுதலான கற்பிதங்களை கற்பிக்கக்கூடாது. அவர்களுக்கு நாம் அனைவரும்தான் பொறுப்பு.
தலைமை ஆசிரியர் அனுமதி இன்றி எந்தவித உணவுகளும் வழங்க கூடாது. அப்படி வரும் காலங்களில் பள்ளி வளாகத்தில். எந்த அனுமதி இன்றி அரசியல் கட்சியினர் யாரேனும் வந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.
