டலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த வழக்கறிஞர் வாசுகி தாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ”நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேர்தல் நடைமுறையின் புனிதம் சமரசம் செய்யப்பட்டுள்ளது.  பிரச்சாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது, சிறுவர்களை சுரண்டியது என திமுக, அதிமுக, தவெக கட்சியினர், வாக்காளர்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளனர்” என குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டுள்ளார்.

”கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தவெக தலைவர் விஜய், தவெகவுக்கு வாக்களிக்கும்படி பெற்றோருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என குழந்தைகள் மீது உணர்வுப்பூர்வமாக செல்வாக்கை செலுத்தியுள்ளார். இது பரவலாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. குறிப்பாக மயிலாப்பூர், ஆலங்கக்கூளம், திருமங்கலம் உள்ளிட்ட தொகுதிகளில் பணப்பட்டுவாடா நடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெற்றிபெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரவில்லை எனத் தெரிவித்துள்ள மனுதாரார், தேர்தல் நடவடிக்கைகளில் குழந்தைகள் மீது செல்வாக்கை செலுத்தியது, பணப்பட்டுவாடா உள்ளிட்ட ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது தொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளுக்கு எதிராக சுதந்திரமான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு மே 29ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையம், திமுக, அதிமுக, தவெக ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version