தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கத்தில், தமிழக அரசியல் வரலாற்றிலேயே புதிய மைல்கல்லாக Gen Z (1990களின் பிற்பகுதியில் பிறந்தவர்கள்) தலைமுறையைச் சேர்ந்த முதல் அமைச்சர் என்ற பெருமையை அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலி பெற்றுள்ளார்.

இன்று காலை 7 மணி வரை தனக்கு அமைச்சர் பதவி கிடைக்கப் போகிறது என்ற விபரமே தெரியாமல் இருந்த கமலிக்கு, முதலமைச்சர் விஜய் கொடுத்த இன்ப அதிர்ச்சி கோட்டை வட்டாரத்தில் பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவைப் பட்டியலில் அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ கமலியின் பெயர் கடைசி நிமிடம் வரை இறுதி செய்யப்படாமல் இருந்தது. முன்னதாக, மற்றொரு பெண் எம்.எல்.ஏ-வான சத்யபாமாவின் பெயரே தீவிரப் பரிசீலனையில் இருந்தது. ஆனால், இறுதி நேரத்தில் சத்யபாமாவுக்குப் பதிலாக கமலியின் பெயரை முதல்வர் விஜய் டிக் செய்துள்ளார். காலை 7 மணிக்குப் பிறகே தனக்கு அமைச்சர் பதவி என்ற அதிகாரப்பூர்வத் தகவல் கிடைத்ததாகக் கூறி கமலி நெகிழ்ந்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கொங்கு மண்டலத்தின் மிக முக்கியத் தொகுதியான அவிநாசியில் பாஜ கட்சியின் முக்கியத் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல். முருகனை எதிர்த்துப் போட்டியிட்டு அசாத்திய வெற்றி பெற்றவர் தான் இந்த கமலி.

மத்திய அமைச்சரையே வீழ்த்தி தமிழகத்தின் கவனம் ஈர்த்த ஒரு இளம் பெண்ணுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதல்வர் விஜய் உறுதியாக இருந்துள்ளார். அதன் வெளிப்பாடாகவே இவருக்கு இந்த ஜாக்பாட் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதல் ‘Gen Z’ அமைச்சர்:

1998-ஆம் ஆண்டு பிறந்த 28 வயதே ஆன கமலி, தற்போதைய அமைச்சரவையின் மிக இளம் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடிப்பதற்கு இளைஞர்களும், ‘ஜென் ஜி’ தலைமுறையினரும் மிக முக்கியப் பங்காற்றிய நிலையில், அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் கமலிக்கு கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசியல் அனுபவமிக்க ஜாம்பவான்களை வீழ்த்தி, இளம் வயதிலேயே கோட்டையில் அமைச்சராக அடியெடுத்து வைத்துள்ள கமலிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version