வேட்பு மனுவில் வழக்கு விவரங்களை மறைத்ததால், ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ததாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ், ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

அவரிடம், ராபர்ட் புரூஸ் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.

அப்போது, 1 லட்சத்து 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்ற நிலையில், ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்காமல் தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதாக கூறுவது தவறு என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

மேலும், வேட்பு மனுவில் வழக்கு குறித்த தகவல்களை மறைத்ததால் தான் ராபர்ட் புரூஸுக்கு எதிராக தேர்தல் வழக்கு தாக்கல் செய்ததாகவும், இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் அளித்த நிலையில், குறுக்கு விசாரணை முடிவடையாததால், வழக்கு விசாரணையை ஜூலை 9ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மீண்டும் ஆஜராகும்படி நயினார் நாகேந்திரனுக்கு உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version