கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க அனுமதி கோரி, டிஜிபி அலுவலகத்தில் விஜய்யின் வழக்கறிஞர் மனு அளித்துள்ளார்.

கரூர் வேலாயுதம்பாளையத்தில் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். ஆளும் திமுக தரப்பினரும், தவெக தரப்பினரும் மாறி, மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவில்லை என தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இதற்கிடையில், விஜய் கரூர் செல்லும்போது எந்த விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வலியுறுத்தி, தமிழக வெற்றி கழகத்தினர் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளதாகவும், நீதிமன்ற வழிகாட்டுதலோடு பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம், தவெக தலைவர் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமாரின் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த விஜய் உயிரிழந்தவரின் தங்கையிடம் அண்ணன் ஸ்தானத்தில் இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் அறிவழகன், விஜய் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அனுமதி மற்றும் பாதுகாப்பு வேண்டி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

மனு அளித்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக வழக்கறிஞர் அறிவழகன், “தமிழக வெற்றிக் கழக தலைவர் கரூர் விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்கு அனுமதிக் கேட்டும், அதற்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

டிஜிபி அலுவலகத்தில் இது தொடர்பாக என்ன சொல்லப்பட்டது?, எப்போது விஜய் மக்கள் சந்திக்கின்றார் உள்ளிட்ட கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பியபோது, தவெக வழக்கறிஞர் அறிவழகன் பதிலளிக்க மறுத்துவிட்டு காரில் ஏறி சென்றதால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version