சென்னையில் திமுக மாணவரணி சார்பில் திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், புரசைவாக்கத்தில் முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தலைமையில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, அமைச்சர் கில்லி சரத் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திமுக மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்று தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, அமைச்சர் கில்லி சரத் தொடர்பான விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக மாணவரணி சார்பில் எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியிருந்ததாகவும், ஆனால் காவல்துறை அனுமதி மறுத்ததாகவும் தெரிவித்தார்.
மேலும், “தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவா திமுக போராட்டத்தில் ஈடுபடுகிறது? மக்களின் நியாயமான கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லவே இந்தப் போராட்டம் நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.
“இது வெறும் டிரைலர்தான். ஒரு இடத்தில் நடத்தத் திட்டமிட்ட போராட்டம், தற்போது மூன்று இடங்களில் நடைபெறுகிறது. கைது நடவடிக்கைகள் எங்கள் இயக்கத்துக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கும். அடிக்க அடிக்க எழும் பந்தாகவும், அறுக்க அறுக்க மணக்கும் சந்தனமாகவும், தீட்ட தீட்ட ஜொலிக்கும் வைரமாகவும் திமுக இருக்கும்” என அவர் தெரிவித்தார்.
மேலும், “எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் 24 வயதிலேயே நெருக்கடிகளை சிரித்த முகத்துடன் சந்தித்தவர். அவரது வழியில் நாங்களும் கொடும் சிறையாக இருந்தாலும், தடியடியாக இருந்தாலும் சிரித்த முகத்துடன் சிறை செல்லத் தயாராக இருக்கிறோம். அரசு எங்களை எப்படி அணுகுகிறதோ, அதேபோன்ற அணுகுமுறையையே நாங்களும் கடைப்பிடிப்போம். இந்தப் போராட்டம் தொடரும், தொடரும், தொடரும்,” என சேகர்பாபு தெரிவித்தார்.
