நாகையில் நடைபெறும் பிரச்சாரத்திற்காக விஜய் புறப்பட்ட நிலையில், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
2026 தேர்தலில் தீவிரம் காட்டி வரும் விஜய் இரு மாநாட்டுகளை தொடர்ந்து மக்களை சந்தித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த வாரம் திருச்சியில் பிரச்சாரம் செய்த விஜய், இன்று நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார். நாகையில் நடைபெறும் மக்கள் பிரச்சாரத்திற்காக தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புறப்பட்டார்.
நாகை மாவட்டம் புத்தூர் ரவுண்டானா பகுதியில் இருக்கும் அண்ணா சிலை அருகே பகல் 12.30 மணிக்கு விஜய் உரையாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் மதியம் 3 மணிக்கு விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார். இந்த சூழலில் திருச்சி செல்லும் விஜய் அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகை செல்வதால் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதற்கு முன்னதாக திருச்சி மரக்கடை பிரச்சாரத்திற்கு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் விஜய் பேசுவதில் தாமதம் ஏற்பட்டது.
இதேபோல் நாகை பிரச்சாரத்திற்கு அதிக தொண்டர்கள் குவிந்தால் விஜய்க்கு நெருக்கடியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நாகையை தொடர்ந்து திருவாரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதும் கவனத்தை ஈர்த்துள்ளது.கலைஞர் காலத்தில் இருந்தே திருவாரூர் திமுகவின் பலம் வாய்ந்த பகுதியாக காணப்படுகிறது. தொடர்ந்து திமுகவையும், திமுக ஆட்சியையும் எதிர்த்து வரும் விஜய், திமுகவின் கோட்டையான திருவாரூரில் எந்த மாதிரியான பிரச்சாரத்தை மேற்கொள்வார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திருவாரூர் டெல்டா சார்ந்த பகுதியாக இருப்பதால் விஜய்யின் பிரச்சாரம் விவசாயத்தை சார்ந்து இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.