லீட்ஸ் நகரில் நடைபெற்று வந்த இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை என்ற பெயரிலான இந்த தொடரின் முதல் போட்டி கடந்த 20-ந் தேதி லீட்ஸ் நகரில் நடைபெற்றது.

டாஸில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். டெஸ்ட் போட்டிகளில் இது அவரது 5-வது சதமாகும். கேப்டன் சுப்மன் கில் 147 ரன்களும், துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் 134 ரன்களும் குவித்தனர். கே.எல்.ராகுல் தன் பங்கிற்கு 42 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங், பென் ஸ்டோக்ஸ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த இங்கிலாந்து தன் பங்கிற்கு சரியான பதிலடியை கொடுத்தது. அந்த அணியின் ஓலியே போப் 106 ரன்கள் குவித்தார். ஹாரி ப்ரோக் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பென் டக்கெட் 62 ரன்களும், ஜேமி ஸ்மித் 40 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 38 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 465 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுக்கள், முகமது சிராஜ் 2 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

இதன்மூலம் 6 ரன்கள் என்ற முன்னிலையுடன் இந்தியா தனது 2-வது இன்னிங்சை ஆடியது. இந்த முறை கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி 137 ரன்கள் குவித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 118 ரன்கள் எடுத்து அசத்தினார். வெளிநாட்டு மண்ணில் ஒரே போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்தார். தமிழக வீரர் சாய் சுதர்சன் 30 ரன்கள் எடுத்தார். 10 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா 364 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜோஷ் டங், ப்ரைடன் கார்ஸ் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்சை கடைசி நாளில் தொடங்கியது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் ஜாக் க்ராலி, பென் டக்கெட் அபாரமாக விளையாடினர். அந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தது. லீட்சில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பென் டக்கெட் 149 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். க்ராலி தன் பங்குக்கு 65 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 33 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஜோ ரூட் மற்றும் ஜேமி ஸ்மித் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றது. இருவரும் ஆட்டமிழக்காமல் இங்கிலாந்துக்கு வெற்றி தேடி தந்தனர். ரூட் 53 ரன்களுடனும், ஸ்மித் 44 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது.

5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பைக்கான போட்டியில் இங்கிலாந்து 1-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version