பாமக வன்னியர் சங்க மாநாடு 12 ஆண்டுகளுக்குப் பிறகு மாமல்லபுரம் அருகே திருவிடந்தை பகுதியில் இன்று நடைபெறுகிறது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு மாதமாக இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பாமக மாநில மாநாடு நடைபெறும் திடலில் 25க்கும் மேற்பட்ட எல்இடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதிலிருந்து பாமக தொண்டர்கள் மாநாட்டில் அதிக அளவில் பங்கேற்க உள்ளனர். இதற்காக 1,80,000 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைவர்கள் அமரும் மேடைக்கு எதிரே, நிகழ்வுகளை காண 3 இடங்களில் ராட்சத எல்இடி திரைகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், 40×20 அளவில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு திடலில் 3,000 திற்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பாமக சித்திரை முழு நிலவு மாநாட்டை முன்னிட்டு இன்று மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 71 டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் 34 மது கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல்லா ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் பகல் 1 மணி முதல் அனைத்து உணவகங்கள் மற்றும் மது கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையில் உள்ள 32 மது கடைகளை மூட வேலூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். வேலூர், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்களின் உத்தரவின்படி 32 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் எந்த இடையூறும் இல்லாமல் வரும்படி பாமக தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version