சென்னை கிண்டியில் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
சென்னை கிண்டி கிங் நிலைய வளாகத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழம் சார்பாக 6.50 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 417.07 கோடி மதிப்பீட்டில் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர்சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் முருகானந்தம், அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஸ் குமார் மற்றும்
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நாராயணன்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையில் 7 தளங்களாக கட்டப்படும் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனையில் குழந்தைகளுக்கான பொது மருத்துவம், தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, குழந்தை எலும்பியல் துறை, எண்டோஸ்கோபி பிரிவு, நரம்பியல் துறை, இருதவியல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு, நுரையீரல் பிரிவு, சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை, குழந்தைகளுக்கான மருத்துவ தீக்காயம் மற்றும் புனரமைப்புப் பிரிவு, இரைப்பைக் குடல் பிரிவு, இருதய மார்பக அறுவை சிகிச்சை, உள்ளிட்ட 19 சிகிச்சை பிரிவுகள் மருத்துவமனையில் அமைய உள்ளது.
தமிழகத்தில் இருந்து குழந்தைகளுக்கான சிகிச்சைக்கு வருபவர்கள் சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு வர வேண்டும், எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவ பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதன் காரணமாக அதற்கு இணையாக சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட கிண்டியில் சுமார் 750 படுக்கைகளுடன் கூடிய குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலைய கட்டடம் அமைக்கப்பட உள்ளது.
குழந்தைகளுக்கான மருத்துவமனை தலைநகர் சென்னையில் எழும்பூரில் மட்டுமே இருந்து வந்த நிலையில், தற்போது கிண்டியில் மற்றொரு குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய உள்ளதால் தென்மாவட்டம் மற்றும் வட மாவட்டத்திலிருந்து வரும் மருத்துவ பயனாளர்கள் சென்னை கிண்டியில் சிகிச்சை பெறும் வகையில் குழந்தைகளுக்கான உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
