கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா, தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கின் பின்னணி:

போதைப்பொருள் சப்ளையர் கெவினிடம் நீண்ட காலமாகப் போதைப்பொருள் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், தனது நண்பர்களுக்கும் அதைக் கொடுத்துப் பழக்கி வந்ததாகவும் நடிகர் கிருஷ்ணா மீது காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, நேற்று கைது செய்யப்பட்ட கிருஷ்ணாவை, 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜாமீன் மனுவில் கிருஷ்ணா முன்வைத்த வாதங்கள்:

சிறப்பு நீதிமன்றத்தில் கிருஷ்ணா தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவில், தனக்கும் இந்த வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், காவல்துறை தன்னைத் தவறாகக் கைது செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

தான் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

வழக்கிற்குத் தொடர்புடைய எந்த போதைப்பொருட்களும் தன்னிடமிருந்து காவல்துறையால் கைப்பற்றப்படவில்லை.

தான் எந்த போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை.இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட பிரசாந்த் உள்ளிட்ட யாருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த வழக்கு உள்நோக்கத்துடன் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் தான் கைது செய்யப்பட்டுள்ளேன்.

கெவின் என்பவருக்கும் தனக்கும் அண்மை காலங்களில் எந்த தொடர்பும் இல்லை. கடந்த 2020 ஆம் ஆண்டிற்குப் பிறகு அவருடன் எந்த நட்பும் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னரே அவரின் வாட்ஸ்அப் குழுவில் இருந்து தான் வெளியேறிவிட்டேன். அதன் பிறகு எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. பழைய வாட்ஸ்அப் குழுவை வைத்து தனக்கு எதிராக காவல்துறை இந்த வழக்கை பதிவு செய்திருக்கிறது.

எனவே, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், நீதிமன்றம் விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் ஏற்கத் தயாராக இருப்பதாகவும் கிருஷ்ணா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version