தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், 108 இடங்களைப் பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேக்கரை மாநிலத் தலைமைச் செயலாளர் சாய்குமார் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் இழுபறி மற்றும் அதனால் ஏற்படக்கூடிய சட்டம் ஒழுங்கு நிலவரங்கள் குறித்து ஆளுநரிடம் தலைமைச் செயலாளர் விரிவாக விளக்கமளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் என்ற இலக்கை எட்ட தவெக-விற்கு இன்னும் சில இடங்கள் தேவைப்படுவதால், ஆளுநர் இதுவரை ஆட்சி அமைக்க முறைப்படி அழைப்பு விடுக்கவில்லை. இந்த நிலையில், தவெக தொண்டர்கள் மத்தியில் நிலவும் எதிர்பார்ப்பு மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆளுநருடன் ஆலோசித்துள்ளார். மறுபுறம், பெரும்பான்மை ஆதரவுக்கான போதிய கடிதங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஆளுநர் விஜய்யிடம் ஏற்கனவே விளக்கியுள்ள நிலையில், அரசின் உயர்மட்ட அதிகாரிகளுடனான இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
