மேகதாது அணை விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜய், கர்நாடக முதல்வரை நேரில் சந்திக்க முடிவெடுத்துள்ளது அற்புதமான நடவடிக்கை என்றும், இதனால் தமிழ்நாட்டிற்கு எந்தவித பாதகமும் ஏற்படாது, சாதகமே ஏற்படும் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசியத் தலைவர் கே.எம். காதர் மைதீன் தெரிவித்துள்ளார்.
திருச்சி பாலக்கரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மைதீன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த காதர் மைதீன், தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ஆட்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அங்கம் வகித்து வருவதாகவும், வரவிருக்கும் உள்ளாட்சி, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் தவெக தலைமையிலான கூட்டணியிலேயே தொடர்ந்து பயணிப்போம் என்றும் கூறினார். இடப்பங்கீடு குறித்து தவெக தலைமையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் காதர் மைதீன் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 3-ம் தேதி கர்நாடக முதல்வரைச் சந்தித்துப் பேசத் தமிழக முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது என்றும் இந்தப் பேச்சுவார்த்தை மூலம் இரு மாநிலங்களுக்கும் இடையே சுமூகமானத் தீர்வும், தமிழ்நாட்டிற்குச் சாதகமான நல்ல முடிவும் கிடைக்கும் என்றார்.
நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்து, நுழைவுத்தேர்வு நடத்தும் உரிமையை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை ஐயூஎம்எல் முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்ட காதர் மைதீன், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருப்பது போராட்டத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும் என்றார்.
