கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு சமர்ப்பித்த திருத்தப்பட்ட திட்ட அறிக்கைகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் மீண்டும் நிராகரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு மத்திய அமைச்சகம் அனுப்பியுள்ள அறிக்கையில், பயணிகள் எண்ணிக்கை, பயண நேரச் சேமிப்பு மற்றும் மக்கள் தொகை அளவுகோல் எனத் தமிழக அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL) அளித்த விளக்கங்களை ஏற்க இயலாது எனத் தெரிவித்துள்ளது.
காரணம் என்ன?
7.5 கி.மீ தூரப் பயணத்தில் மெட்ரோ மூலம் 8 நிமிடங்கள் சேமிக்கப்படும் என்ற CMRL-ன் கணக்கீட்டை நிராகரித்துள்ள அமைச்சகம், நிலையங்களுக்கு நடப்பது மற்றும் காத்திருக்கும் நேரத்தைக் கணக்கிட்டால் நேரச் சேமிப்பு எதுவுமில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோவை மாநகரப் பகுதியில் 15.84 லட்சம் மக்கள் மட்டுமே வாழ்கின்றனர் என்றும், 2017 மெட்ரோ ரயில் கொள்கையின்படி தேவைப்படும் 20 லட்சம் மக்கள் தொகை அளவுகோலை இவ்விரு நகரங்களும் எட்டவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவை இல்லாத நிலையில் மெட்ரோ பயன்பாடு சாத்தியமில்லை எனக் கூறியுள்ள ஒன்றிய அரசு, மத்திய அரசின் ‘பிஎம் இ-பஸ் சேவா’ (PM e-Bus Sewa) திட்டத்தில் தமிழகம் இணையாததையும் சுட்டிக்காட்டியுள்ளது.
சென்னையின் மெட்ரோ கட்டம் 2 பணிகள் இதுவரை 54.62% மட்டுமே முடிவடைந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அமைச்சகம், சிறிய நகரங்களுக்குச் செலவு குறைந்த ‘பஸ் ரேபிட் டிரான்சிட்’ (BRTS) முறையே ஏற்றது எனக் கூறி இரு திட்ட கோப்புகளையும் திருப்பி அனுப்பியுள்ளது.
முதலமைச்சர் விஜய் ஆய்வுக் கூட்டம் நடத்திய நிலையிலும், பிரதமருக்குத் தமிழக அரசு கடிதம் எழுதிய நிலையிலும் இந்த நிராகரிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
