குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையுடன், கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) நிர்வாகிகள் தமிழக முதலமைச்சரை இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை வழங்கினர்.
சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் ஜேம்ஸ், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகளின் சார்பில் மின்சார நிலைக்கட்டண உயர்வு, பழைய வாட் வரி அபராதம், ஜி.எஸ்.டி. வரிச்சுமை, மூலப்பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்ததாக தெரிவித்தார்.
குறிப்பாக, குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்கான மின்சார நிலைக்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், 12 கிலோவாட்டிற்குக் குறைவான மின் இணைப்புகளை அரசாணையின்படி LT-3A-1 பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டதாக கூறினார். மேலும், 18 கிலோவாட்டிற்குக் குறைவான மின் இணைப்புகளுக்கு மீண்டும் பவர் பேக்டர் விலக்கை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.

புதிய தொழிற்பேட்டைகள் அமைத்தல், முதலீட்டு மானியத்தை விரைந்து வழங்குதல், பிணையமில்லா குறைந்த வட்டிக் கடன்கள் வழங்குதல், மூலப்பொருள் வங்கி அமைத்தல், அரசுத் துறை கொள்முதல்களில் உள்ளூர் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் மனுவில் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.
இந்த அனைத்து கோரிக்கைகளையும் முதலமைச்சர் கவனமாகக் கேட்டறிந்ததாகவும், குறு மற்றும் சிறு தொழில்களை பாதுகாக்கவும், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும், கோரிக்கைகளை பரிசீலித்து சாதகமான முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்ததாக ஜேம்ஸ் தெரிவித்தார்.
