அரசு பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கப்படும், முட்டைகளை பொறுப்பாளரே திருடி சென்றுள்ளார்.

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தின் கோரணபட்டு ஊராட்சிக்குட்பட்ட கோ.சத்திம் கிராமத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் முட்டைகளை பள்ளி பொறுப்பாளர் மற்றும் இரவு காவலாளர் ஆகியோர் ஹோட்டல்களுக்கு விற்று பணம் சம்பாதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது.

இப்பள்ளியில் 547 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பள்ளி நாளிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் பள்ளி பொறுப்பாளராகப் பணியாற்றும் அருணாச்சலம் மற்றும் இரவு நேர காவல் பணியாளர் பாலமுருகன் ஆகிய இருவரும் இந்த முட்டைகளில் பெரும் பகுதியை மாணவர்களுக்கு வழங்காமல் தங்கள் சொந்த லாபத்துக்காக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெற்றோர்களின் தகவலின்படி, 547 மாணவர்களுக்கு வழங்க வேண்டிய முட்டைகளில் சுமார் 330 மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்ததாகவும், மீதமுள்ள முட்டைகளை பள்ளியிலிருந்து எடுத்துச் சென்று அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு விற்பனை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முறைகேட்டை அறிந்த சில பெற்றோர்கள், முட்டைகளை ஹோட்டலுக்கு எடுத்துச் செல்லும் போது இருவரையும் நேரில் பிடித்து கேள்வி எழுப்பினர். அந்த நேரத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வீடியோவில் பெற்றோர்கள், “எங்கள் குழந்தைகளின் ஊட்டச்சத்தை திருடி ஹோட்டலுக்கு விற்கிறீர்களா?” என்று ஆவேசமாகக் கேட்பது தெளிவாகக் காணப்படுகிறது. இச்சம்பவம் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல பெற்றோர்கள், “அரசு இலவசமாக வழங்கும் உணவுப் பொருட்களை தவறாகப் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. எங்கள் குழந்தைகளின் உடல்நலம் ஆபத்தில் உள்ளது” என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி, குற்றம் சாட்டப்பட்ட இருவரின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும், பள்ளியில் சத்துணவுத் திட்டத்தின் செயல்பாட்டை முழுமையாக ஆய்வு செய்து, இத்தகைய மோசடிகள் மீண்டும் நடைபெறாத வகையில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் நடைமுறையில் உள்ள குறைபாடுகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. மாணவர்களின் ஊட்டச்சத்து உரிமையை பாதுகாக்க அரசு துரித நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version