தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் காவலர்கள் தாக்கியதால் இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், உடற்கூறாய்வு நிறைவுபெற்று உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில் கடந்த 17ஆம் தேதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விசாரணைக்காக தென்பாகம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
காவல் நிலையத்தில் விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் அருணாச்சலத்திற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அருணாச்சலம் உயிரிழந்தார். அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காவல் நிலைய விசாரணையின் போது அருணாச்சலம் தாக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட காயங்களே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்றும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இது தொடர்பாக தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்த அவர்கள், சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அருணாச்சலத்தின் மரணம் குறித்து நீதித்துறை நடுவர் தலைமையில் விசாரணை நடத்த வேண்டும், பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், தன்னை போலீசார் அடித்தார்கள் என்று கடைசியாக பேசிய வாக்குமூலம் மற்றும் காவல் நிலையத்தில் மயங்கி விழும் வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.
இதை தொடர்ந்து உறவினர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து, இன்று அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பிரேத பரிசோதனை முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜய ராஜசேகர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அருணாச்சலத்தின் உடல் அவரது குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடல் அமுதா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
