தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் ‘சமூகநீதி சர்வே’ எனப்படும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பைத் தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் வருமாறு: “இந்தியாவிலேயே சமூகநீதியில் முன்னோடியாகத் திகழும் மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளுக்கு முன்பே 100 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த பெருமை கொண்ட இந்த மாநிலம், அண்மைக்காலமாக சமூகநீதி முன்னெடுப்புகளில் பிற மாநிலங்களை விடப் பின்தங்கியுள்ளது. சுமார் 95 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய தரவுகளைக் கொண்டே இட ஒதுக்கீடு குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் கையாளப்படுவதால், புதிய சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயமாகியுள்ளது.”
“2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு, தனது தேர்தல் அறிக்கையில் ‘சாதிவாரி சர்வே’ மேற்கொள்ளப்படும் என்று முதல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அந்த வாக்குறுதியை முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும். பீகார், தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஏற்கனவே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தி இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தியுள்ள நிலையில், அதேபோன்ற ஒரு நடவடிக்கையை மேற்கொள்ள தமிழகத்திற்கு அனைத்து சட்டப்பூர்வ அதிகாரங்களும், நிதி வசதிகளும் உள்ளன.”
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தவும், சமூகநீதி சர்வேயின் அவசியம் குறித்து விவாதிக்கவும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜூன் 5-ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகளுக்குத் தனித்தனியாக அழைப்பு விடுக்கப்படும் என்று மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரையின் போதே, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும் என்பதும், அடுத்த இரு மாதங்களுக்குள் கணக்கெடுப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இவ்வாது தனது அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
