வாக்குக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தவெகவிற்கு தெரிவிக்க மத்திய தகவல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எதிர் வரும் சட்டப் பேரவை தேர்தலில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து தகவலை தெரிவிக்க தகவல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க வழக்கறிஞர் அணி சென்னை மண்டல இணை ஒருங்கிணைப்பாளர் ஆதித்ய சோழன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
ஆதித்ய சோழன் தாக்கல் செய்த மனுவில், எதிர் வரும் 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலின் போது, பணப் பட்டுவாடா குறித்து புகார் அளிக்க கட்டணமில்லா தொலைப்பேசி எண் வசதி செய்யப்பட்டுள்ளதா? இதற்கு முன் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த கட்சிகள், வேட்பாளர்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன? பணப் பட்டுவாடா குறித்து புகார் தெரிவிக்க மொபைல் ஆப் மற்றும் இணையதள வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளதா? பணப் பட்டுவாடா தொடர்பாக கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறப்பட்டன? என்பன உள்ளிட்ட கேள்விகளை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டது.
இதில் இரு கேள்விகளுக்கு மட்டுமே தேர்தல் ஆணைய பொது தகவல் அதிகாரி பதிலளித்தார். இது சம்பந்தமான உத்தரவை எதிர்த்து, மத்திய தகவல் ஆணையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டாவது மேல் முறையீட்டு விண்ணப்பத்தை தாக்கல் செய்தும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. அந்த மேல் முறையீட்டு விண்ணப்பத்தை பரிசீலித்து தகவல் அளிக்கும் படி, மத்திய தகவல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் மேல் முறையீட்டு மனு மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும். இரண்டு மாதங்களில் முடிவெடுக்காவிட்டால், மனுதாரர் இந்த வழக்கை புதுப்பித்துக் கொள்ளலாம் என மத்திய தகவல் ஆணையத்திற்கு உத்தரவிட்டனர்.
