தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக பரம எதிரிகளாகத் திகழ்ந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளும், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை எதிர்கொள்ள ஒரே இரவில் ரகசியமாக ஒன்றிணைந்துள்ளதாக மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார்.
இந்தத் திடீர் நெருக்கம் தமிழகத்தின் நலனுக்காகவோ அல்லது மதச்சார்பின்மை கொள்கைக்காகவோ ஏற்படவில்லை என்றும், விஜய் என்ற ஒற்றை மனிதனின் அரசியல் எழுச்சியைத் தடுப்பதற்காக மட்டுமே இந்த ‘பயந்த கட்சிகளின் கூட்டணி’ உருவாகியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். “நிலையான அரசு” என்ற முழக்கம், தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள இந்தக் கட்சிகள் பயன்படுத்தும் வெறும் அரசியல் மொழி மட்டுமே என அவர் விமர்சித்துள்ளார்.
திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது ஒரு சரியான முடிவு என மாணிக்கம் தாகூர் தனது பதிவில் நியாயப்படுத்தியுள்ளார். ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வின் ‘B-டீம்’ என்று விமர்சிக்கப்படும் தரப்புகளுடன் கைகோர்த்துக்கொண்டு, தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியாது என அவர் திமுக-வைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தில் மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், மக்கள் தீர்ப்பால் நிராகரிக்கப்பட்ட சக்திகளுடன் காங்கிரஸ் இனி நிற்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் முடிவுகளில் திமுக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்ததைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “திமுக தனது முகமூடியைக் கழற்றுமா?” என்ற கேள்வியுடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.
