பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சமீபத்தில், அன்புமணி ராமதாஸ் தான் பாமகவின் தலைவர் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

ஆனால், அங்கீகரிக்கப்படாத கட்சியின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் முடிவெடுக்க முடியாது என நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இந்தச் சூழலில், அன்புமணி போலி ஆவணம் சமர்ப்பித்ததாக ராமதாஸ் தரப்பில் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த உட்கட்சி பூசல் நீடித்து வரும் நிலையில், துரோகிகள் இருக்கும் வரை ஒன்றிணைய முடியாது என்று அன்புமணி கூறியது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அன்புமணியின் இந்த குற்றச்சாட்டுக்கு ராமதாஸ் தரப்பை சேர்ந்த மூத்த தலைவரான ஜி.கே. மணி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசமாகப் பதிலளித்தார். அவர் பேசுகையில், “தந்தையையும் மகனையும் பிரித்துவிட்டதாக மனசாட்சி இல்லாமல் அன்புமணி பேசுகிறார். அன்புமணியை வளர்த்துவிட வேண்டும் என்பதற்காக மாவட்டந்தோறும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தியவன் நான். பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்சனைக்கு அன்புமணிதான் காரணம். அவருடைய செயல்பாடுகளால் டாக்டர் ராமதாஸ் கண்ணீர் வடித்தார்” என்று குற்றம் சாட்டினார்.

மேலும், “மனதளவில் கூட துரோகம் நினைக்காத என்னை துரோகி என்று அன்புமணி பேசுவது மிகவும் வருத்தமாக உள்ளது. அன்புமணிக்கு தேர்தலில் சீட் அளிக்க வேண்டும், மத்திய அமைச்சராக வேண்டும் எனப் பேசியது நான்தான். ‘என் அப்பா ராமதாஸுக்கு அடுத்ததாக உங்களைத்தான் நினைக்கிறேன்’ என்று கூறியவர் அன்புமணி” என்று ஜி.கே. மணி தெரிவித்தார்.

ராமதாஸ் உடன் இருப்பவர்களைத் துரோகி எனக் கூறி அன்புமணி அவமானப்படுத்துவதாகவும், வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டைக் கெடுத்தது நான்தான் என்று அன்புமணி அவதூறாகப் பேசியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், அன்புமணியின் மத்திய அமைச்சர் பதவிக்கு முதலில் உறுதியாக இருந்தவர் காடுவெட்டி குருதான் என்றும், ராமதாஸை கொல்லுங்கள் எனப் பதிவிட்டவரை அழைத்து அன்புமணி பாராட்டியதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். அத்துடன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கூட அன்புமணி கடுமையாக விமர்சித்ததாக குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், ராமதாஸும், அன்புமணியும் ஒன்றாக இணைவார்கள் எனில், “நானும் எனது குடும்பத்தினரும் கட்சியிலிருந்து வெளியேற தயார். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன். துரோகிகள் என அன்புமணி கருதும் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறத் தயார்” என்று ஜி.கே. மணி பேசியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version