சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றங்களால், ஏப்ரல் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.380 உயர்ந்து ரூ.14,050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை யாரும் எதிர்பாராத வகையில் ரூ.3,040 அதிகரித்து ரூ.1,12,400-ஆக உயர்ந்துள்ளது. மார்ச் மாத இறுதியில் ஓரளவு குறைந்திருந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி எகிறியுள்ளது நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,670-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதேபோல், வெள்ளியின் விலையும் தன் பங்குக்கு அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.15 அதிகரித்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.15,000 அதிகரித்து ரூ. 2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுத்து வருகின்றனர். இதன் எதிரொலியாக உலகளாவிய சந்தையில் தங்கம் விலை 2% முதல் 3% வரை உயர்ந்ததே இந்தியாவிலும் இந்த தடாலடி விலை மாற்றத்திற்குக் காரணமாகும். திருமண சீசன் தொடங்கி உள்ள நிலையில், இந்த விலை உயர்வு நடுத்தர மக்களை கவலையடையச் செய்துள்ளது.
