ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், யாரும் விரும்பாத ஒரு மோசமான சாதனையைச் சமன் செய்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

ஐபிஎல் 2026-ன் நான்காவது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. நேற்று நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ்  அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், தனது துல்லியமான பந்துவீச்சைத் தவறவிட்ட அர்ஷ்தீப், ஒரே ஓவரில் 4 வைட்கள் மற்றும் 1 நோ பால் என வாரி வழங்கினார். இதனால், வெறும் 6 பந்துகள் வீசப்பட வேண்டிய அந்த ஓவரில், அவர் மொத்தம் 11 பந்துகளை வீச வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டார். இது அந்தப் போட்டியின் போக்கையே மாற்றியமைத்ததோடு, அர்ஷ்தீப்பின் பந்துவீச்சுத் தரத்தையும் விமர்சனத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

19 ஓவர்களுக்குப் பிறகு குஜராத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பந்து அர்ஷ்தீப்பிடம் ஒப்படைக்கப்பட்டது, அவர் 20வது ஓவரின் முதல் பந்திலேயே ஒரு வைடை வீசினார். அடுத்த இரண்டு சரியான பந்துகளில் ராகுல் தெவாடியா ரன் எடுக்கத் தவறினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் தெவாடியா ஒரு பவுண்டரி அடித்தார். பின்னர் அர்ஷ்தீப் ஒரு நோ-பால் மற்றும் இரண்டு வைடுகளை வீசினார். அந்த ஓவரின் நான்காவது சரியான பந்து ஒரு டாட் ஆக இருந்தது. ஐந்தாவது பந்தில் தெவாடியா ஒரு ரன் எடுத்தார், ஆனால் அடுத்த பந்திலேயே அர்ஷ்தீப் ஒரு வைடை வீசினார். நடுவரும் அடுத்த பந்தை வைடு என அறிவித்தார், ஆனால் டிஆர்எஸ் அது வைடு இல்லை என்பதை உறுதி செய்தது. ஆக, அர்ஷ்தீப் சிங் 20வது ஓவரில் மொத்தம் 11 பந்துகளை வீசினார்.

இதற்கு முன்னதாக, ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசிய பவுலர்களின் பட்டியலில் அர்ஷ்தீப் சிங் தற்போது இணைந்துள்ளார். கடந்த 2023-ல் ஆர்சிபி வீரர் முகமது சிராஜ் (vs MI) மற்றும் சிஎஸ்கே-வின் துஷார் தேஷ்பாண்டே (vs LSG) ஆகியோர் இந்த மோசமான சாதனையைத் தொடங்கினர். தொடர்ந்து கடந்த 2025-ஆம் ஆண்டு சீசனில் எல்எஸ்ஜி-யின் ஷர்துல் தாக்கூர், ஆர்ஆர்-இன் சந்தீப் சர்மா மற்றும் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் ஒரே ஓவரில் 11 பந்துகளை வீசி திணறினர். தற்போது அர்ஷ்தீப் சிங்கும் இந்தப் பட்டியலில் இணைந்திருப்பது, டி20 கிரிக்கெட்டில் நிலவும் கடும் அழுத்தத்தை எடுத்துக் காட்டுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version