என்.டி.ஏ. கூட்டணியில் அமமுகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் விதமாக வரும் ஜன.23ம் தேதி மோடி தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான பேனரில் டிடிவி தினகரன் புகைப்படம் இடம்பெற்றிருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடந்த தேர்தல்களில் வாக்குகள் சிதறியதால் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய, பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு பிரிவுகளை ஓரணியில் திரட்ட பாஜக மேலிடம் விரும்புகிறதாக தெரிகிறது.
இருப்பினும், கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியிருக்கையில், வரும் 23ம் தேதி சென்னை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது கூட்டணி குறித்த முடிவு இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றும் அதற்கான பணிகளில் பாஜக – அதிமுக கூட்டணி கட்சிகள் முழுவீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், இந்த பொதுக்கூட்டத்திற்கான வரவேற்பு பதாகையில் டிடிவி தினகரன் போட்டோ இடம்பெற்றுள்ளது. இதுவரை அவர் கூட்டணி முடிவை அறிவிக்காத நிலையில், அமமுக என்.டி.ஏ. கூட்டணியில் மீண்டும் இணைந்துவிட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
