ஈரோடு மாவட்டம் அம்மாப்பேட்டை சுங்கச்சாவடியில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடி குறித்து உள்ளூர் மக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பவானி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கருப்பண்ணன் தாக்கல் செய்த மனுவில், அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். சுங்கச்சாவடி அமைக்கப்பட்டால், உள்ளூர் மக்கள் தங்கள் விவசாயப் பொருட்களைக் கொண்டு செல்வதில் சிரமம் ஏற்படும் என்றும், சாலைப் பணிகள் முறையாகச் செய்யப்படாததால் விபத்துகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், 7 மீட்டர் அகலமாக இருந்த இருவழிச்சாலை 10 மீட்டராக அதிகரிக்கப்பட்டிருந்தாலும், குறுகலான வளைவுகள் காரணமாக வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும் எனவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இந்த வழித்தடத்தைச் சுங்கச்சாவடி சாலையாக மாற்றுவது தேவையற்றது என்றும், இதனால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை எனவும் கருப்பண்ணன் தனது மனுவில் வலியுறுத்தியிருந்தார். எனவே, அம்மாப்பேட்டையில் சுங்கச்சாவடி அமைக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு வரும் வரை குறிப்பிட்ட சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன், சுங்கச்சாவடி குறித்து மனுதாரர் மற்றும் ஊர் மக்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.