திமுக கூட்டணி கட்சிகளிடையே நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், வரும் பிப்.3ம் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்த மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“எத்தனை எதிரிகள் வந்தாலும் எங்களை அசைத்துப் பார்க்கமுடியாது” எனச் சொல்லிக் கொண்டே இருந்த திமுக கூட்டணியின் மீது கண் பட்டுவிட்டது போலிருக்கிறது. உள்ளே இருக்கும் கட்சிகள் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடான கருத்துகளை பேச ஆரம்பித்திருப்பதால் கூட்டணிக்குள் சலனப் புயல் வீச ஆரம்பித்திருக்கிறது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் காங்கிரஸ் சார்பில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கவேண்டும் என்று வெளிப்படையாகவே பிரச்சனை வெடித்துள்ளது. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இது தொடர்பான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கு பிடிக்கொடுக்காமல் திமுக சார்பிலும் அமைச்சர் முதல் நிர்வாகிகள் வரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுக்கமுடியாது என்று தெரிவித்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க, தேர்தலில் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்றும் மற்ற கட்சிகளும் திமுகவிற்கு நெருக்கடி கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், பிப்ரவரி 3ம் தேதிக்கு பிறகு கூட்டணி கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாம். கூட்டணியில் உள்ள காங்கிரஸ்-25, விசிக-6, சிபிஐ-6, சிபிஎம்-6 உள்ளிட்ட கட்சிகள் இம்முறை தேர்தலில் அதிக சீட்டுகளை கேட்க திட்டமிட்டுள்ளார்களாம். அது திமுகவுக்கு நெருக்கடியை மேலும் அதிகரிக்கலாம்.
கமலின் மநீம கட்சியும் அதிக தொகுதிகளை கேட்பதால் இம்முறை திமுக போட்டியிடும் இடங்கள் கடந்த முறையை விட குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
