அதிமுகவை ஒரு துணைக்கட்சியாக அடகு வைக்க எடப்பாடி பழனிசாமி ஆள் தேடுவதாக அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி ஆதங்கம் காட்டியுள்ளார்.
தனது எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ள கே.சி.பழனிசாமி, திமுக, மத்தியில் ஆளும் பாஜகவின் அமைச்சரவையில் இணைவதற்கும், பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்து வரும் தேர்தல்களைச் சந்திப்பதற்கும் ஆயத்தமாகி வருவதாகக் கூறியுள்ளார்.
தவெக, காங்கிரஸ் மற்றும் தற்போது ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒருபுறம் இருக்க, அதிமுக அனாதையாக விடப்பட்டுள்ளதாக ஆதங்கம் தெரிவித்துள்ள அவர், மேலும் கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் பலரை வெளியேற்றும் வேலையை மட்டுமே எடப்பாடி பழனிசாமி சிறப்பாகச் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த உடனேயே நான் (கே.சி. பழனிசாமி) வலியுறுத்தியபடி கட்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தால், தற்போது அதிமுக ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கும் எனவும், எடப்பாடி பழனிசாமி செய்தது தவறு என்பதைத் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருந்தாலும், தற்போதுகூட இயக்கத்தை ஒருங்கிணைத்து பலப்படுத்தும் திசையில் அவர் சிந்திப்பதாகத் தெரியவில்லை எனவும் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த இயக்கத்தை என்ன செய்ய நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி? கட்சியைக் கலைத்துவிட நினைக்கிறாரா? அல்லது தேர்தலில் போட்டியிடாத ஒரு இயக்கமாக அதிமுகவை மாற்ற நினைக்கிறாரா? அல்லது தேமுதிக, மதிமுக போன்ற கட்சிகளைப் போல ஒரு துணைக் கட்சியாக அடகு வைக்க ஆள் தேடுகிறாரா என கே.சி.பழனிசாமி தனது பதிவில் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
