அண்ணா நகர் தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்களின் பணித் திறனாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இவ்வரசு தொழிலாளர்களின் நலனை மையமாக கொண்டு, நேர்மையான மற்றும் வெளிப்படையான நிர்வாகத்துடன் செயல்படுகிறது என்றும், தொழிலாளர் துறை அலுவலகங்களில் மற்றும் 20 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பெறப்படும் அனைத்து மனுக்களின் மீது உடனுக்குடன் தீர்வு கண்டு, நிலுவை ஏதுமின்றி செயல்படுமாறும் அறிவுறுத்தினார்.
தற்போது இணையதளத்தில் உரிமம் கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது உடனடியாக தீர்வு காணுமாறும், கொத்தடிமைத் தொழிலாளர்கள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களை அடையாளம் கண்டறிந்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அனைத்து அலுவலர்களும் உரிய நேரத்தில் அலுவலகத்திற்கு வருகை புரிந்து சரிவர பணியாற்றுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், இக்கூட்டத்தில் தொழிலாளர் துறை அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து, அலுவலர்கள் மேலும் சிறப்பாக செயல்பட அறிவுரைகள் வழங்கினார்.
இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திற திறன் மேம்பாட்டுத்துறை அரசு செயலாளர் வீர ராகவ ராவ், தொழிலாளர் ஆணையர் ஷில்பா பிரபாகர் சதீஷ், கூடுதல் தொழிலாளர் ஆணையர்கள், தொழிலாளர் இணை ஆணையர்கள் மற்றும் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
