பெரும்பான்மை இல்லாததால் தவெக ஆட்சியமைக்க ஆளுநர் இதுவரை அழைப்பு விடுக்கவில்லை. இந்தநிலையில், பெரும்பான்மையைத் திரட்ட தமிழக வெற்றிக் கழகம் தற்போது இடதுசாரிகள் மற்றும் சிறுபான்மையினக் கட்சிகளை நோக்கித் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக தரப்பு, தாங்கள் என்.டி.ஏ கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவித ஆதரவும் கோரவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெளிவுபடுத்தியுள்ளது. மாறாக, விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கேட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவுக்காகத் தவெக தலைமை காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) மாநிலச் செயலாளர் வீரபாண்டியனை, தவெக-வின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேரில் சந்தித்துப் பேசினார். ஏற்கனவே தவெக தலைவர் விஜய், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு கோரி அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மல் குமார், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் தரப்பு, கட்சியின் உயர் மட்டக் குழுவில் விவாதித்துவிட்டுத் தங்களது முடிவை விரைவில் அறிவிப்பதாக தெரித்ததாக கூறினார். .
தவெக தரப்பில் ஆளுநரிடம் ஏற்கனவே கடிதம் வழங்கப்பட்டுள்ள நிலையில், “சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள எங்களை ஆட்சி அமைக்க ஆளுநர் சட்டப்படி அழைக்க வேண்டும்” என்றும் வலியுறுத்திய நிர்மல் குமார், அரசியல் சாசன விதிகளின்படி ஆளுநர் நடுநிலையோடு செயல்படுவார் என்று நம்புவதாகவும், இறுதி முடிவுக்காகப் பொறுத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
