பெல்ஜியத்தைச் சேர்ந்த அயான் பீம் அப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.191.08 கோடிக்கு புற்றுநோய் பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கான புரோட்டியஸ் 235 புரோட்டான் என்ற மருத்துவ உபகரணம் மற்றும் துணைக்கருவிகளை சென்னையில் உள்ள அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் நிறுவனம் கடந்த 2017ஆம் ஆண்டில் இறக்குமதி செய்தது.

சென்னை துறைமுகத்தில் சுங்க வரி செலுத்தி சிகிச்சை இயந்திரத்தை வெளியில் எடுத்துவரும் பணியை என்.எஸ்.கே. என்ற நிறுவனம் மேற்கொண்டது. பொருளை பெறுவதற்கான நுழைவுப்பத்திரம் தாக்கல் செய்த பிறகு, துறைமுக மேடையை பயன்படுத்தியதற்காக கப்பல் துறை கட்டணம்  ரூ.59,23,610/ வசூலிக்கப்பட்டது.

பின்னர் இறக்குமதி சாதனத்தின் விலை மறுமதிப்பீடு செய்யப்பட்டு, ரூ.21,85,082/- வரையிலான கப்பல்துறை கட்டணத்தை என்.எஸ்.கே. நிறுவனம் திரும்பப் பெற்றது.

இதில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் இருவர், என்.எஸ்.கே. நிறுவனம் மற்றும் அதன் மேலாளர் மீது சிபிஐ மோசடி, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டதற்கான எந்த ஆதாரமும் சிபிஐ தாக்கல் செய்யவில்லை என்றும், அதிகமாக செலுத்தப்பட்ட கப்பல் துறை கட்டணமே விதிமுறைகளின்படி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அரசுக்கு எந்த நிதி இழப்பும் ஏற்படவில்லை என்பதால், குற்றச்சாட்டுக்கு அடிப்படை இல்லை என்றும், இந்த வழக்கைத் தொடர்வது சட்ட நடைமுறையின் அதிகார துஷ்பிரயோகம் என்றும் கூறி, சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version