கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பேரூராட்சி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் இன்று காலை நேரிட்ட பயங்கர தீ விபத்தால் ஏற்பட்ட கரும்புகையால் அப்பகுதி மக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர்.
ஆனைமலை பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில் இருந்து தினசரி சேகரிக்கப்படும் கழிவுகள், மக்கள் சக்தி நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு வரப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று காலை இந்த குப்பை கிடங்கில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டது. குப்பைகளில் பிடித்த தீ கடகடவென மற்ற இடங்களுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இதனால் பல நூறு அடி உயரத்திற்கு கரும்புகை சூழ்ந்து, அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த அடர்ந்த புகையினால் அப்பகுதி மக்களுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதுடன், உடல்நலக் குறைபாடுகள் ஏற்படும் அச்சமும் உருவாகியுள்ளது. தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் கடுமையாக போராடி வருகின்றனர்.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த குப்பை கிடங்கால் தங்களுக்கு தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதாகக் கூறும் பொதுமக்கள், இதனை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவசர கோரிக்கை விடுத்துள்ளனர்.ர்.
