தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்கிற பிரசார பயணம் நேற்று தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. பிரச்சாரத்தின் போது நயினார் நாகேந்திரன், “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா என இரண்டு முதலமைச்சர்களை தமிழகத்திற்கு தேனி கொடுத்ததால் தேனியை தனி மாவட்டமாக அறிவித்தது அதிமுக அரசு. மேலும் தேனி மாவட்டத்திற்கு மருத்துவ அரசு கல்லூரியும் கொடுத்துள்ளது. தற்பொழுது மத்திய அரசு சார்பாக தேனி மாவட்டத்தில் மட்டும் ஜல்ஜீவன் திட்டத்திற்கு கீழ் ஒன்றரை லட்சம் பேருக்கு புதிய குடிநீர் இணைப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி ஆண்டிப்பட்டி உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
திமுக ஆட்சியில் தேனி மாவட்டத்தில் தற்பொழுது லஞ்சம் ஊழல் திருட்டுதான் நடந்து கொண்டிருக்கிறது. 58 ஆம் கால்வாய் இன்னும் திறக்கப்படவில்லை. திமுக அரசுக்கு இது சம்பந்தமாக எந்தவித அக்கறையும் இல்லை. அவர்கள் நோக்கம் எல்லாம் எப்படியாவது உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சராக வேண்டும் என்பதுதான்.மேலும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் கொலைகள் அதிகமாகி விட்டன. எங்கேயும் குடியும் கஞ்சா போதையையும் தான் அதிகமாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே இருக்கிறது ? திமுக கூட்டம் கூட்டினால் அங்கே டாஸ்மாக் வியாபாரம் அதிக அளவில் நடக்கும்.

இது எல்லாவற்றையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த முறை 10% கூடுதலாக பெற்று நாங்கள் (தேசிய ஜனநாயக கூட்டணி) வெற்றி பெறுவோம். கவுண்டன் ஸ்டார்ட் ஆகிவிட்டது இனி யாராலும் திமுக அரசை காப்பாற்ற முடியாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

