சமீபத்தில் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்து ஓபிஎஸுக்கு அதிர்ச்சிக் கொடுத்த நிலையில், மற்றொரு ஆதரவாளரான பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய கட்சி தொடங்கி தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறையும் வரை கட்சியில் எந்தவித சிக்கலும் இல்லை. 2016ஆம் ஆண்டிற்கு பின்னர் உட்கட்சி பூசல் வெடித்தது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என இரண்டு அணிகளாக பிளவுபடும் நிலை ஏற்பட்டது. இந்த சூழலில் கட்சியில் துணை ஒருங்கிணைப்பாளராக இருந்த வைத்திலிங்கம் ஓரங்கட்டப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.

அதன்பிறகு ஒற்றை தலைமைக்கான நடவடிக்கைகளில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டினார். கட்சியில் தனது அதிகாரம் ஓங்கும் வகையில் ஓபிஎஸ்சை ஓரம்கட்டினார். அப்போது ஓபிஎஸ்சின் ஆதரவாளராக வைத்திலிங்கமும் வெளியேறும் நிலை உருவானது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் ஓபிஎஸ் தலைமையில் செயல்பட தொடங்கினார். ஓபிஎஸ் உடன் இருந்த பலர் நம்பிக்கை இழந்து வேறு கட்சிகளில் இணையத் தொடங்கினர்.

மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்ட பலரை சொல்லலாம். ஆனால் வைத்திலிங்கம் ஓபிஎஸ்க்கு வலதுகரம் போல தொடர்ச்சியாக உடனிருந்தார். ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் ஓபிஎஸ் எந்தவித முடிவும் எடுக்காமல் அலைக்கழித்து வந்தார். இது வைத்திலிங்கம் உள்ளிட்ட ஆதரவாளர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி 21ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள், மற்றொரு பேரதிர்ச்சியாக, குன்னம்  தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரனும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், செய்தியாளர் சந்திப்பில் பல்டியடித்த அவர், அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.

இப்படி ஒவ்வொரு ஆதரவாளரும் ஓபிஎஸ்ஸை கழற்றிவிட்டு செல்கின்றனர். அந்த வரிசையில் தற்போது  ஓபிஎஸ் உடன் அரசியல் ஆலோசகராக இருக்கும் பண்ருட்டி ராமச்சந்திரன், எம்ஜிஆர் அதிமுக என புதிய கட்சியை தொடங்கி தவெகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதால் எரிச்சலடைந்த ராமச்சந்திரன் இம்முடிவுக்கு வந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதேபோல், ஓ பன்னீர் செல்வத்தின் ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான தர்மர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணையுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version