சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அ.தி.மு.க. உட்கட்சி மோதலினால் பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக செயல்பட்ட பலரும் தற்போது திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ் ஆகியோரை தொடர்ந்து தி.மு.க.வில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம். தனது எம்.எல்.ஏ. பதவியையும் ராஜினாமா செய்தார்.

அவரைத்தொடர்ந்து அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓபிஎஸ்-ன் ஆதரவாளருமான குன்னம் ராமச்சந்திரனும் விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.  இந்நிலையில், அரசியல் பொது வாழ்க்கையில் இருந்து விலகுவதாக குன்னம் ராமச்சந்திரன் அறிவித்துள்ளார். எந்த அரசியல் கட்சியிலும் இணையும் எண்ணமில்லை எனவும், குடும்பத்தினர் கூறியதால் திமுகவில் இணையும் முடிவிலிருந்து பின்வாங்கினேன் எனவும் அவர் தெரிவித்தார்.

ஒருபுறம் என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன் இணைந்துள்ள நிலையில், ஓபிஎஸும் இணைந்துவிடுவார் என்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கூட்டணி குறித்து அறிவிக்க தாமதம் செய்துவருகிறார். இதனால் அதிருப்தியில் உள்ள மற்ற ஆதரவாளர்களும் வெவ்வேறு கட்சிகளுக்கு தாவ முயன்று வருகின்றனர்.

ஓபிஎஸுக்கு இடது கை, வலது கை போல இருந்த வைத்திலிங்கம் உள்ளிட்டோரே திமுகவில் இணைந்துள்ள நிலையில் ஓபிஎஸ்ஸையும் இழுக்க திமுகம் பல பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறது. அந்தவகையில், இன்று ஓபிஎஸ்ஸுடன் அமைச்சர் சேகர் பாபு சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சபாநாயகர் அறையில் ஓபிஎஸ்ஸை அமைச்சர் சேகர் பாபு சந்தித்து 15 நிமிடங்கள் பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் தங்களது நிலைபாடு என்ன என்பது குறித்து ஓபிஎஸிடம் சேகர் பாபு கேட்டறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணியில் இருந்து மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், உள்ளிட்டோர் அடுத்தடுத்து திமுகவில் ஐக்கியமான நிலையில், இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version